வெள்ளி, நவம்பர் 14, 2014

பேறு காலத்திற்கு முந்தைய உடல் நலம் (Preconceptional Health)
renugaதாய்மை ஒரு வரம்.அநேகமாக உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தாய்மையைக் கொண்டாடுகின்றன. ஓர் இனம், சவால்களை மீறி தன்னைப் பெருக்கிக் கொள்வதற்கு தாய்மையே அடிப்படை.
இயல்பிலேயே பெண் அனைத்தையும் மறு உற்பத்தி செய்பவள். அவள் தனக்காக மட்டும் சிந்திப்பதில்லை. எதிர்காலத் தலைமுறைக்காகவும் சிந்திக்கிறாள். தலைமுறை தலைமுறையாக வளர்ச்சியைப் பெற்று வருவதற்கு பெண்ணின் இந்த இயல்பே காரணமாகும். இந்தப் பண்பினைப் போற்ற வேண்டியது நமது கடமையாகும்.
ஒரு பெண் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சரியாக இருக்கும்போதுதான் நல்ல ஆரோக்கியமான, புத்திசாலியான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். ஒரு பெண் தாயாவது என்பது இயல்பான ஒன்று. இருந்த போதிலும் ஒரு பெண் தாயாவதற்கு தன்னை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இச்சவாலை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது, இது சம்பந்தமாக நாம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன போன்ற கேள்விகளோடு, மகப்பேறு நிபுணர்,
டாக்டர். திருமதி. R. ரேணுகா தேவி M.B.B.S., DGO. அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
டாக்டர். திருமதி. R. ரேணுகா தேவி அவர்கள் தமது M.B.B.S., கல்வியை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றவர். மகப்பேறு மருத்துவத்தில் பட்டயப் படிப்பை மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புற பணியாற்றி வருகிறார். மேலும் தொடர்புக்கு:
இலக்கம் 3,
கௌதம் செண்டர் அனெக்ஸ்,
1054, அவினாசி சாலை,
கோவை- 641 018
போன்: 0422- 2241138, 2242244
டாக்டர், ஒரு பெண் தாயாவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு. முக்கியமான நிகழ்வும் கூட. ஒரு பெண் தாயாவதற்கு முன்பு அதாவது மகப்பேறுக்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
9161099மகப்பேறுக்கு முந்திய பெண்ணின் நலம் என்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் .ஏனெனில் மகப்பேறுக்கு முந்தைய காலங்களில் நாம் நடந்து கொள்வதில்தான் நமது குழந்தையின் எதிர்காலமே உள்ளது. இது பெண் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஆணிற்கும் இதில் முக்கியமான பங்கு உள்ளது.
பேறுகாலத்திற்கு முந்தைய உடல் நலம்(Preconceptional Health)
என்பது ஒரு ஆணோ அல்லது பெண்ணோ நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, மருத்துவரைக் கலந்தாலோசித்து அவரின் மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதாகும். ஆனால், உண்மையில் நாம் இதற்கு அவ்வளவாக மெனக்கெடுவதில்லை. “பேறுகாலத்திற்கு முந்தைய நலம்” என்பது ஒவ்வொரு ஆணிற்கும், பெண்ணிற்கும் வேறுபடும். அவர்களின் வயது, உடல் நிலை, உணவுப் பழக்கங்கள், வேலை முறை போன்றவற்றை கவனத்தில் கொண்டு மருத்துவர் சில மருத்துவ முறைகளையோ அல்லது தொடர்ச்சியான மருத்துவ நடவடிக்கைகளையோ பரிந்துரைப்பார். அந்த சமயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்கள் மற்றும் பின்பற்றக்கூடாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் பரிந்துரைப்பார்.
எனவே, மகப்பேறுக்குத் தயாராகும் தம்பதிகள் தாய்மைப் பேறு, அதில் அடங்கியுள்ள சிக்கல்கள், அபாய காரணிகள், உடல் நலக் கோளாறுகள், குழந்தையைப் பாதிக்கக்கூடிய காரணிகள் போன்றவற்றை மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற வேண்டும்.
பயப்படாதீர்கள்! மகப்பேறு என்பது மிகவும் இயல்பான ஒன்று. உங்கள் மகப்பேறு மருத்துவர் உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவார்.
டாக்டர், குழந்தைப் பேறுக்கு தயாராவதற்கு முன்பு நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகளைப் பற்றி கூறுங்களேன்?
Diagnostics2குழந்தைப் பேறு வேண்டும் தம்பதிகள் மூன்று மாதங்களுக்கு முன்னரே, புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை அறவே விட்டுவிட வேண்டும். சரியான எடையைப் பராமரிக்க வேண்டும்.
உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்களைப் பற்றிய உடல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் மனரீதியானப் பிரச்சினைகளைத் தெரிவித்து விடுங்கள். தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோய்களைத் தவறாது கூறுங்கள். அதற்கும் குழந்தைப் பேறுக்கும் சம்பந்தமில்லை என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள். தவிரவும் அவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா அல்லது குணப்படுத்தப்பட்டுள்ளதா என்று உறுதி செய்யுங்கள். குறிப்பாக AIDS, டயாபடீஸ், தைராய்டு கோளாறுகள், மரபு வழிக் கோளாறுகள் குறிப்பாக வலிப்புநோய்(Seize Disorder), அதிக இரத்த அழுத்தம், மூட்டு நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் சொல்லியே ஆக வேண்டும்.
தினசரி 400 மைக்ரோ கிராமிலிருந்து 800 மைக்ரோ கிராம் வரை போலிக் அமிலம், அதாவது வைட்டமின் B9 எடுத்துக் கொள்ளுங்கள். இது பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் முதுகெலும்பிற்கும் நல்லது.
தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களைக் கையாள்வதோ அல்லது அது மாதிரியான சூழல்களில் வேலை செய்வதையோ தவிர்த்து விடுங்கள்.
டாக்டர், இதில் ஆணுக்கு எதுவும் பங்கில்லையா?
c41p76-1நிச்சயமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆணுக்கும் பங்குண்டு. உண்மையில் ஆணின் பங்களிப்பை பெண் பெரிதும் விரும்புகிறாள். கருத்தரிப்பதற்கு முன்னரே தம்பதிகள் இருவரும் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும்.
ஆண்கள் குறிப்பாக புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம் இருப்பின் அதை அறவே கைவிடுவது போன்றவை கட்டாயமாகும்.
பெண்ணின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது, அவள் அருகாமையில் இருப்பது போன்றவை மனரீதியான பாதுகாப்பை அவளுக்கு அளிக்கும். வெறுமனே மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிட்டு டிவி பார்ப்பதோ அல்லது பேப்பர் படிப்பதோ வேண்டாம். சரியான மாத்திரை சாப்பிடுகிறார்களா, நன்றாக உணவு அருந்தினார்களா என்று அக்கரையோடு விசாரியுங்கள். அதற்கு உதவுங்கள்.
தவிரவும், மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. கருத்தரிப்பிற்குத் தயாராவதற்கு முன்பு பெண்களைப் போலவே ஆண்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக பால்வினை நோய்கள் ஏதாவது உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
தங்களுக்கு தற்போதுள்ள நோய்களைப் பற்றியும், தாங்கள் தற்போது உட்கொண்டு வரும் மருந்துகளைப் பற்றியும் தங்களது மருத்துவரிடம் தவறாது தெரிவித்து விடுங்கள்.
நீங்கள் உடலுக்கு கேடுவிளைவிக்கும் வேதி பொருட்கள் உற்பத்தி செய்யும் வேலையிடங்களில் பணியாற்றினால் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பணியின்போது நீங்கள் உபயோகப்படுத்தும் ஆடைகளையும், வீட்டில் அணியும் ஆடைகளையும் தனித்தனியே துவைத்துக் கொள்வது நல்லது.
டாக்டர், பேறு காலத்திற்கு முன்பு தடுப்பூசிகள் ஏதாவது போட வேண்டுமா?
khashayar20100919134127043கருத்தரிப்பதற்கு 3 லிருந்து 6 மாதங்களுக்கு முன்னரே இதைப் பற்றித் திட்டமிடவேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசி அதாவது ஹெபாடிடஸ் B, ரூபெல்லா, அம்மை போன்ற நோய்களிலிருந்து நம்மையும் நமக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும் காக்க தடுப்பூசி அவசியம். இதைப் பற்றி தங்கள் மருத்துவர் தங்களிடம் தெளிவாக விளக்குவார். தேவைப்படின், கால மாற்றத்திற்கேற்ப அவர் மேலும் தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கலாம். எது தேவை எது தேவையற்றது என்பதை உங்கள் மகப்பேறு மருத்துவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
டாக்டர், மரபு வழி ஆலோசனை (Genetic Counseling) என்பதைப் பற்றி இப்போது எல்லோரும் பரவலாகப் பேசுகிறார்கள். அதைப் பற்றிக் கூற முடியுமா?
nrg-providersஆம். தற்போது இது பரவலாகப் பேசப்படுகிறது. நமது குழந்தையின் ஜீன்கள் நமது குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட ஜீனில் ஏற்படும்குறைபாடுகள் அல்லது குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவை மரபு வழியில் ஏற்படலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதேபோல் உங்கள் துணைக்கோ அல்லது அவர்தம் குடும்பதினருக்கோ ஏதாவது பிறவிக் குறைபாடு இருந்தால், நீங்கள் கர்ப்பமடைவதற்கு முன்னமேயே உங்கள் டாக்டரிடம் தெரிவித்து விடுங்கள். இந்தத் தகவல் உங்கள் குழந்தைக்கு என்ன மாதிரியான அபாய காரணியைத் தோற்றுவிக்கும் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர அவருக்கு உதவியாய் இருக்கும்.
உங்கள் அல்லது உங்கள் துணை இருவரில் யாருடைய குடும்பத்தினருக்கும் கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருந்தாலும் உங்களுக்கு மரபு வழி ஆலோசனை தேவைப்படலாம்.
• பிறவிக் குறைபாடுகள், குரோமோசோம் குறைபாடுகள் அல்லது புற்று நோய்
• இரண்டு முறை அல்லது அதற்கு மேலும் கருத்தங்காமல் போகும்போது அல்லது கருவில் இறந்து போதல்
• 35 வயதுக்கு மேல் தாயாகும் தாய்மார்கள்
• நெருங்கிய இரத்த உறவில் திருமணம்
ஆனால் இதைப்பற்றிய முடிவு எடுக்க வேண்டியது உங்கள் மருத்துவர்தான்.
குழந்தைப் பேறு விரும்பும் தம்பதியருக்கு தாங்கள் கூறும் பொதுவான ஆலோசனைகள்?
pregnant-womanஇன்றைய நவீன மருத்துவத்தில் பிரசவம் என்பது மிக எளிதாய் மாறியிருக்கிறது. பயப்படாதீர்கள். இது மிகவும் இயல்பானது. மனதை சந்தோசமாய் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல இசையைக் கேளுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். எந்தவித சந்தேகம் இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கேளுங்கள். கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாய் இருக்காதீர்கள். ஏனெனில் இது நீங்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அடுத்த தலைமுறை சம்பந்தப்பட்டது. Good luck.

0 comments:

கருத்துரையிடுக