உன்னதமான சிறுநீரகங்கள்!

                   உங்கள் சிறுநீரகங்களை கவனியுங்கள்,

இதயத்தைக் காத்துக் கொள்ளுங்கள்!




நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்காமல் போகும்போது, இதய நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் கூடுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை நாம் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை. இதனைக் கருத்தில் கொண்டு "உலக சிறுநீரக நாள்" என்ற அமைப்பானது, 2012ம் ஆண்டை,        " சிறுநீரகங்களை கவனிப்போம்,  இதயத்தைக் காப்போம்" என்ற நோக்கத்தினை முன்வைத்தது. உங்களுக்கு சிறுநீரக நோய் அபாயம் இருந்தால், உங்கள் இதயத்தினைப் பாதுகாத்திட உங்களது மருத்துவருடன் இன்றே ஆலோசியுங்கள்.

நமக்காக நம்முடைய சிறுநீரகங்கள் என்ன செய்கின்றன?

நமது சிறுநீரகங்கள் மிகச் சிறந்த, விவேகமான வடிகட்டியாகச்  செயல்படுகின்றன. நமது இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களையும், நச்சுக் கிருமிகளையும் சுத்தம் செய்கின்றன. இதன் மூலம் நமது உடலின் நீர்த்தன்மையின் அளவும், தன்மையும் பாதுகாக்கப்படுகிறது. தவிரவும், இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யத் தேவையான ஹார்மோன்களையும் அவை சுரக்கின்றன. மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குவதன் மூலமும் இதயம் சீராக இயங்க நமது சிறுநீரகங்கள் மிக முக்கியமான பணியை ஆற்றுகின்றன.



உங்களுக்குத் தெரியுமா?
நம்முடைய  உடம்பின் மொத்த எடையில் சிறுநீரகத்தின் அளவு 0.5% ஆகும். இருந்த போதிலும், நமது இரத்தத்தின்  20 %  அளவை அவை பெறுகின்றன. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 1000 -1200 மில்லி லிட்டர் இரத்தத்தை பெறுகின்றன.

நம்முடைய சிறுநீரகங்கள் இயங்காவிட்டால் என்ன ஆகும்?

நமது சிறுநீரகங்கள் இயல்பாக செயல்படாவிட்டால், உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் நமது உடலில் சேரும். இதன் மூலம் நமது உடலின் மற்ற இயக்கங்களும் சீர்கெட்டுப் போகும். இது தீவிர சிறுநீரக நோய் (Chronic Kidney Disease - CKD ) என்று அழைக்கப்படுகிறது. இது நாட்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் நமது சிறுநீரகங்கள் படிப்படியாகச் செயல் இழந்து போவதன் மூலம் கண்டறியப்படுகிறது. இதன் முற்றிய கட்டத்தில் கண்டறியப்படும் போது, நமக்கு டயாலிஸஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

தீவிர சிறுநீரக நோய் பொதுவாகக் காணப்படுகிறதா?

துரதிர்ஷடவசமாக ஆம். நகர்ப்புற வாழ்க்கையில், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், உடல்  கொழுப்பு அதிகரித்தல், உட்கார்ந்து அதிக நேரம் வேலை செய்வது போன்றவை இயல்பாகி விட்டன. இதனால், CKDன் தாக்கம் அதிகரிக்கின்றது. உதாரணமாக, அமெரிக்காவில் தற்போது 7ல் ஒருவர் சிறுநீரக நோயால் அவதிப்படுகிறார்.

தீவிர சிறுநீரக நோய் ஏன் இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது? 

ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்தால், அவருக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகரிக்கிறது. தவிரவும், இது உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம். துரதிர்ஷ்டவசமாக, இதன் பொருட்டான விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. 
  நமது சிறுநீரகம் சரியாகச் செயல்படாமல் போகும் போது தேவையற்ற பொருட்கள் நம் இரத்தத்தில் கூடுகின்றன.நம் உடலின் ஹோர்மோன்கள் தடுமாற்றமடைகின்றன. இத்தகைய மாறுதல்கள் நமது இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் சரியாகச் செயல்பட விடாமல் தடுக்கின்றன. இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டுமானால் நமது உடலின் இரசாயன சமன்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரசாயன சமன்நிலையை சிறுநீரகங்கள் பராமரிக்கின்றன. நமது சிறுநீரகங்கள் சரியாகச் செயல் படாமல் போகும் போது, நமது உடலின் இரத்த அழுத்தம் கூடுகிறது. இதனைக் கவனிக்காமல் விடும்போது இரத்தக் குழாய்கள் தடிமனாகி விடுகின்றன. தீவிர கட்டுக் கடங்காத இரத்த அழுத்தம் இதயத்தை பலவீனமாக்கிவிடுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா? அநேகம் பேர் ஸ்ட்ரோக்  அல்லது மாரடைப்பு ஏற்பட்ட பின்னரே தாங்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறார்கள்.

சிறுநீரக நோய் மற்றும் இதய நோய் அபாயங்களைக் குறைக்கக நான் என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை வாழ்வதன் மூலம் நம்முடைய உடல் நலத்தை நாம் மேம்படுத்த முடியும். இதன் மூலம் சிறுநீரகக் கோளாறு மற்றும் இதய நோயின் அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். கீழ்க்கண்ட ஆரோக்கிய   வாழ்க்கை வழிமுறைகள் ஒரு நல்ல ஆரம்பம் ஆகட்டும்.
  • புகைப் பிடிக்காதீர்கள். புகைப் பிடிப்பவராக இருந்தால் அதை அறவே விட்டு விடுவது உங்கள் இதய நலனைக் காப்பதற்காக நீங்கள் எடுத்து வைக்கும் மிக முக்கியமான அடியாகும்.
  •  சீரான இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையின் அளவைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருங்கள்.
  • சீரான எடையைப் பராமரியுங்கள். உடல் நிறை அளவு பற்றி உங்கள் மருத்துவரிடம் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குச் சரியான அளவை அவர் சுட்டிக் காட்டுவார்.
  • ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். பூரிதக் கொழுப்பையும், அதிகமான உப்பையும் தவிருங்கள்.
  • அதிக அளவில் நீரையும், திரவ உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • வாரத்திற்கு 4 அல்லது 5முறை 1/2 மணியிலிருந்து   3/4 மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினசரி 1/2 மணி நேரம் நடப்பது மிகுந்த வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

 நான் தீவிர சிறுநீரக நோய்  அபாயத்தில் இருந்தால் வேறன்ன  செய்ய வேண்டும்?

ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான் பாதுகாப்பான   வழிமுறை.  சிறுநீரகச் செயல்பாடு குறைவு நமது இதயத்தையும், இதய நோய்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும், நாம் இரு நோய்களையுமே பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமாகும்.
இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மற்றும் சிகிச்சையை மேற்கொள்ளுவது சிறுநீரக செயலிழப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள  உதவுகிறது. அவ்வாறே ஆரம்ப நிலையிலேயே இதய நோய்களைக் கண்டறிவது மாரடைப்புக்கான அபாய காரணிகளை குறைக்க உதவுகிறது.
நீங்கள் இவ்வாறான அபாயக் கட்டத்தில் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி " எவ்வாறு உங்களுடைய சிறுநீரகத்தையும், இதயத்தையும் பாதுகாத்துக்  கொள்வது" என்று ஆலோசனை பெறுங்கள்.
World Kidney Day is an initiative of the International Society of Nephrology
and the International Federation of Kidney Foundations