வெள்ளி, நவம்பர் 14, 2014


கொளந்தைய சாக்கிரதயா பாத்துக் கோனுங்கொ,

அத விட நமக்கு என்ன வேலைங்கொ !

“குழந்தைகளை என்னிடத்தில் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களை சார்ந்தது ” என்றொரு பைபிள் வாசகம் உள்ளது. குழந்தைகளைப் பற்றிய கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகள் உலகப் பிரசித்தம் பெற்றவை. நாம் ஒவ்வொருவருமே கவனத்தில் கொள்ள வேண்டிய வார்த்தைகள் அவை.
photo saranya
நமது கனவுகளையும், ஆசைகளையும் நமது குழந்தைகள் மேல் திணிக்கிறோம் . அல்லது அவர்களுக்கு நலமான வாழ்க்கையை தரவேண்டும், நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை மிகுந்த சோர்வுக்கு உள்ளாக்குகிறோம். இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு மிகச் சிறிய வயதிலேயே மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம். ” அங்கிளுக்கு ஹாய் சொல்லு”, ” எங்கே ஆண்டிக்கு ஸ்தோத்திரம் சொல்லிக் காமி “, ” எம்பொண்ணுக்கு ரெண்டு வயசுதா ஆச்சு. அதுக்குள்ளே எல்லாப் பாட்டும் அத்துப்படி ” என்பது போன்ற உரையாடல்களை நாம் சர்வ சாதாரணமாக எதிர் கொள்கிறோம்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் நமது பங்கு என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன போன்ற விசயங்களில் நாம் அக்கறை கொள்ள வேண்டியதிருக்கிறது. மேலும் அறிந்து கொள்ள

பச்சிளங்குழந்தை நிபுணர் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர். சரண்யா செல்வன் MBBS., MD (Paed)

அவர்களை சந்தித்தோம்.
திருமதி. சரண்யா செல்வன் தனது MBBS படிப்பை கோவை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். மேலும் சிறப்பு நிலை படிப்பாக குழந்தை மருத்துவத்தில் முது நிலைப் பட்டத்தை மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். குழந்தை மருத்துவத் துறையில் ஆகப் பெரிய திட்டங்களோடு ஆர்வத்துடன் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.
தற்போது G.S.N.R. Child Care Centre என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
மேலும் தொடர்புக்கு;
G.S.N.R.Child Care Centre,
இலக்கம் 349, காமராஜர் சாலை,
லயன்ஸ் பஸ் ஸ்டாப் அருகில்,
கோயமுத்தூர்- 641 015
போன் : 0422-4216599
அவருடன் பேசியதிலிருந்து:
டாக்டர், குழந்தை பிறந்ததிலிருந்து இரண்டு வயது வரை குழந்தை பராமரிப்பில் நாம் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன? ஏனெனில் முதல் இரண்டு வருடங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியம் அல்லவா?
ஆம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் 1000 நாட்கள் மிக முக்கியமானது. தற்போது ‘முதல் 1000 நாட்கள்’ என்ற கோட்பாடு பிரபலமாகி வருகிறது. முதல் 1000 நாட்கள் என்பது குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் காலத்தையும், முதல் இரண்டு வருடங்களையும் சேர்த்தது. ஏனெனில் இக்கால கட்டத்தில்தான் மனித மூளையின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். எனவே, அந்த வளர்ச்சிக்கு தேவையான அளவு ஊட்டச் சத்தையும் கொடுக்க வேண்டியதிருக்கிறது.
முதல் 1000 நாட்களைப் பற்றி மேலும் சொல்லுங்களேன்?
குழந்தை கர்ப்பத்தில் உள்ள காலத்திலிருந்து இரண்டாவது பிறந்த நாள் வரை நாம் காட்டும் அக்கறை, அக்குழந்தையின் வளர்ச்சி, கற்கும் திறன் ஆரோக்கியம் போன்றவைகளை தீர்மானிக்கிறது.
கர்ப்ப காலத்தில் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி சரியான முறையில் அமையாமல் போகலாம்.
இரண்டு வயதிற்குள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் நோய் பாதுகாப்புத் திறன் பாதிக்கக் கூடும். இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
எனவேதான் முதல் 1000 நாட்களை நாம் கவனத்துடன் அணுகவேண்டியதிருக்கிறது. உங்கள் மகப்பேறு மருத்துவரிடமும், குழந்தை மருத்துவரிடமும் ஆலோசனை பெறுங்கள். அதன் படி நடக்க உறுதி பூணுங்கள்.
நம் எல்லோருக்குமே நமது குழந்தைகள் Prodigy Child ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நமது குழந்தை அதி தீவிர புத்திசாலி குழந்தையாக வளர ஏதாவது வழி இருக்கிறதா?
350f70b58d96bc6c2e75f0ead9c7178b
Prodigy Child என்கின்ற அதி தீவிர புத்திசாலிக் குழந்தை என்பதற்கான அறிவியல் விளக்கம் வேறு. பொதுவாக, ஒரு குழந்தை குறிப்பிட்ட ஒரு துறையிலோ அல்லது பல்வேறு துறைகளிலோ நிபுணத்துவம் பெற்றிருந்தால், அக்குழந்தையை Prodigy Child என்று சொல்லலாம். உதாரணமாக ஒரு நாற்பது வயது இசைக் கலைஞருக்குரிய இசை ஞானம் ஒரு எட்டு வயது குழந்தைக்கோ அல்லது ஒரு பத்து வயது குழந்தைக்கோ இருக்கலாம். இதற்கு முக்கிய காரணம் அக்குழந்தையின் ஜீன் அதாவது மரபணு. இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒரு குழந்தையை புத்திசாலியாக, நடை முறை வாழ்க்கைக்கு தேவையான அறிவுள்ளதாக, ஆரோக்கியமாக வளர நம்மால் உதவ முடியும். இதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளன.
    • சுற்றுச் சூழல்
    • நல்ல ஆரோக்கியமான சமச்சீரான உணவு பழக்கம்
    • நல்ல பெற்றோர் தன்மை
எல்லா தாய்மார்களுமே புலம்பும் விஷயம் ,” என் குழந்தை சரியாவே படிக்க மாட்டேன் என்கிறான் ” என்பது தான். குழந்தைகள் நன்றாகப் படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஏற்கெனவே குறிப்பிட்ட படி குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. உணவு முறைகளைப் பொருத்தவரை , மூளை வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை அறிவுத் திறன் மிகுந்த ஊட்ட உணவு ( Smart Nutrients) என்கிறார்கள்.
வைட்டமின் A செறிந்துள்ள உணவுகளை கொடுங்கள்.
GYO – Green, Yellow, Orange – வண்ணமுள்ள உணவுப் பொருட்கள் , உதாரணமாக , பச்சை காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவை.
இரும்புச் சத்து, Folic Acid செறிந்துள்ள உணவுப் பொருட்கள் – மீன், இறைச்சி, ஓட்ஸ், கீரைகள் போன்றவற்றில் இரும்புச் சத்து செறிந்துள்ளது.
காய்கறிகள், பருப்பு வகைகளில் Folic Acid செறிந்துள்ளது.
Omega 3 Fatty Acid – பச்சை இலை காய்கறிகள், உதாரணமாக முட்டை கோஸ் போன்றவை, வால்நட், ஆலிவ் எண்ணெய் போன்றவை.
ஸ்ட்ராபெரீஸ்
நார்சத்து உள்ள உணவுகள் – ஆரஞ்சு, பிளம்ஸ், ஆப்பிள் போன்றவை.
இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் ஞாபக சக்தியையும் அதிகப் படுத்தும். கவனக் குறைவையும் போக்கும். சரியான உணவை பற்றி மேலும் அறிய உங்கள் குழந்தை மருத்துவரை லந்தாலோசியுங்கள். உங்கள் குழந்தையின் வயது, நோய் தாங்கும் திறன் போன்ற பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொண்டு நல்ல ஆலோசனையை அவர் வழங்குவார். நீங்களாகவே எதையும் முடிவு செய்ய வேண்டாம்.
நமது குழந்தைகளின் உடல் நலனிற்கும், புத்திக் கூர்மைக்கும் என்ன விதமான உணவுகளை கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக் கூடாது?
67c69a67fd9474b11b18ab6cad5f0d88 (1)
உணவு அளிப்பதில் மிக முக்கியம் என்னவெனில் ஒரே மாதிரியான உணவுகளை தராமல் வெவ்வேறு விதமான உணவுகளைத் தாருங்கள். ஒரு குறிப்பிட்ட உணவுக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று விதமான உணவுகளை உண்ணப் பழக்குங்கள். குழந்தைகள் உணவை வெறுப்பதில்லை. கொஞ்சம் வித்தியாசமாக உணவை மாற்றுங்கள். உதாரணமாக தோசையை வட்டமாக மட்டும் வார்க்காமல், ஸ்டார் வடிவத்திலோ அல்லது முக்கோண வடிவத்திலோ காய் கறிகளை மூக்கு கண் என்று ஒட்ட வைத்தோ கலந்து கொடுங்கள்.
குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும், அதாவது ஒரு வயது முதல் 18 வயது வரை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? அவர்களின் உடல் நலத்திற்கு தூக்கம் ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், தற்போதைய சூழலில் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அவர்களின் தூக்க நேரம் மிகக் குறைவாக உள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் அவசியம். தூக்கம் குறையும் போது அவர்கள் எரிச்சல் அடைவார்கள். கோபப்படுவார்கள். பள்ளிக் கூடத்தில், பாடத்தில் கவனம் செலுத்த மிகவும் கஷ்டப் படுவார்கள். கவனிக்கும் திறன் குறையும். மறதி அதிகரிக்கும். செயல் திறன் பாதிக்கும்.
குழந்தைகளின் தூக்க நேரம் வயது வாரியாக;
பிறந்ததிலிருந்து 3 மாதங்கள் வரை —- 16 – 20 மணி நேரம்
3 – 6 மாதம் வரை — 13 மணி நேரங்கள், பகலில் 4-5 மணி நேரம், இரவில் 8-9 மணி நேரம்.
6 மாதத்திலிருந்து 1 வயது வரை — 9 – 11 மணி நேரம்
1 லிருந்து 6 வயது வரை — 10-13 மணி நேரம் , பகலில் 1-2 மணி நேரம், இரவில் 8-10 மணி நேரம்.
6 லிருந்து 12 வயது வரை —- 9-11 மணி நேரம்.
பதின் பருவம், 13- 19 வயது வரை —- 8 1/2 – 9 1/2 மணி நேரம் .
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப் பழக்குங்கள். தூங்குவதற்கு முன்பு கதை படித்தல், மெலிதான இசையைக் கேட்கச் செய்தல் போன்றவை அவர்களுக்கு நல்ல தூக்கத்தை தரும்.
தற்போதைய காலங்களில் சிறு குழந்தைகளின் மீதே கூட பாலியல் வன்முறை, வல்லுறவு கொள்ளுதல் போன்றவை நடக்கின்றன. நமது குழந்தைகளை அம்மாதிரியான அபாயங்களிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? Good touch, Bad Touch போன்ற விஷயங்களை எந்த வயதிலிருந்து சொல்லி தர வேண்டும்?
Good touch
குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற விஷயங்களைப் பற்றி நாம் அவ்வளவாக கவனம் கொள்வதில்லை. ஆனால், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் இது. இதுமாதிரியான விஷயங்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தைகள் பயப்படுவதுதான். குழந்தைகளை எளிதில் பயப் படுத்தப் முடியும். ‘ வெளியில் சொன்னால் கொன்று விடுவேன், உன் அப்பா அம்மாவைக் கொன்று விடுவேன்’ என்று அவர்களைப் பயப்படுத்தினால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.
இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில்
பெரும்பாலான தாக்குதல்கள் வீட்டில்தான் நடக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் உடல் ரீதியாக துன்படுத்தப் படுகிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட , அதாவது 53 % குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு கிடையாது.
குழந்தைகளை கவனித்துக் கொண்டே இருங்கள். அதை விட நமக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை.
குழந்தைகள் கோபமாகவோ அல்லது சோகமாகவோ இருந்தால் அதற்கான காரணத்தை அறிய முற்படுங்கள்.
கெட்ட கனவுகளால் அவதிப் படுகிறார்களா என்று கவனியுங்கள்.
சரியாகத் தூங்குகிறார்களா என்று கவனியுங்கள்.
பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரத் தயக்கம் காட்டுகிறார்களா என்று கவனியுங்கள்.
பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களால் அல்லது பெரிய மாணவர்களால் துன்புறுத்தப் படுகிறார்களா என்பதைக் கவனியுங்கள். அதைப் பற்றி தைரியமாக உங்களிடம் பேச ஊக்கப் படுத்துங்கள்.
சக மாணவர்கள் உங்கள் குழந்தையை துன்புறுத்தும் போது அதைப் பற்றி ஆசிரியரிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள்.
உங்கள் குழந்தை செல்போன், வீடியோ கேம் , பணம், தின்பண்டம் போன்றவைகளை பள்ளிக்கு எடுத்துச் செல்லக் கூடும். இதுகூட துன்புறுத்தலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே அவைகளை தடை செய்யுங்கள்.
துன்புறுத்தும் பிள்ளைகளின் பெற்றோரிடம் பேசுங்கள்.
எப்போதும் உங்கள் குழந்தையை தனியாக இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். பள்ளிக்கூடத்தில் பாத்ரூமுக்கு செல்லும் போது கூட இரண்டு அல்லது மூன்று பேராக போகச் சொல்லுங்கள்.முதுகில் காயம், கண்ணின் கீழ் கரு வளையம், எலும்பு முறிவு போன்றவை நமது குழந்தை மிக அபாயகரமான கட்டத்தை எட்டி விட்டதாக அர்த்தம்.குட் டச், பேட் டச் போன்றவைகளை சீக்கிரம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புரிய வைத்து விடுங்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப் பெரிய விஷயம். இதில் சுற்றுசூழல், சமுதாயம், பெற்றோர் கடமை போன்ற பல்வேறு காரணிகள் செயல் புரிகின்றன. கலீல் ஜிப்ரான் கூறியபடி,5b07c36aa049b6e85a9b1df394c83da6
“உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால
வாழ்வின் மகன், மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்;
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் -
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் – ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கியோ
நேற்றைக்கோ செல்வதில்லை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும்
வாழும் அம்புகள் அனுப்பபடும்
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!”

0 comments:

கருத்துரையிடுக