ஸெர்வைகல் கேன்ஸர் அறிவோம்! (கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்)

"மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா", என்றார் கவிமணி. " மக்கள் தொகையில் சம பங்குள்ள பெண்களைப் புறக்கணிக்கும் எந்தச் சமூகமும் உயர்வடையாது" என்றார் லெனின்.ஆனால், உண்மையில் நமது பெண்கள் மீதும், அவர்தம் ஆரோக்கியம் மீதும் நாம் அக்கறை கொள்கிறோமா?

சுதந்திர இந்தியாவில், தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெண்கள் உரிமை, கல்வி ஆரோக்கியம் போன்றவற்றில் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்த போதிலும், தற்போது நமது பெண்களை சத்தமில்லாமல் தாக்கும் நோய் "ஸெர்வைகல் கேன்ஸர்" எனப்படும் "கர்ப்பப்பை வாய் புற்றுநோய்" ஆகும். இது அனேகமாக மேற்க்கத்திய நாடுகளில் ஒழிக்கப் பட்டு விட்டது என்கிறார்கள். சுகாதாரமான தண்ணீர், கழிப்பிட வசதி, பெண்கள் தங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை (Personal Hygiene)பேணிகாக்க வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கத்திய பெண்களுக்கு கிடைத்தது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
நமது பெண்களை இந்நோயில் இருந்து காக்கும் கடப்பாடு நமது சமூகத்திற்கு உண்டு. இதைப் பற்றி மேலும் தெளிவு பெற
மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ நிபுணர்
டாக்டர். S. ஜீவா M.B.B.S., DGO.,DNB (Obs& Gynae) அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
Dr.(Mrs.) S. ஜீவா M.B.B.S., DGO., DNB (Obs & Gynae) அவர்கள் தமது M.B.B.S படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றவர். மேலும் மகப்பேறு மருத்துவத்தில் பட்டயப் படிப்பை மணிபால் கஸ்தூரிபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவு செய்தவர். மகப்பேறு மற்றும் மகளிர்  நலன் துறையில் கடந்த 15வருடங்களாக தனது சேவையைப் புரிந்து வருகிறார். ஸெர்வைகல் கேன்ஸர் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவர். தற்போது கோவை பி. எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர்  நலப் பிரிவில் பேராசிரியராகப்  பணிபுரிந்து வருகிறார்.
மேலும் தொடர்புக்கு: 0422 - 4345130

அவரிடம் பேசியதிலிருந்து:
டாக்டர்  கேன்சர் என்றால் என்ன?
கேன்சர்! இந்தச் சொல்லைச் சொல்லும்போதே நமக்குள் ஒரு பதட்டம் குடிகொள்கிறது. நமது சினிமாக்களும் தமது பங்கிற்கு இந்நோயை மிகப் பெரிய ஆட்கொல்லி நோயாக நம்மிடையே சித்தரித்துள்ளன. உண்மையில், ஆரம்ப நிலையில் கண்டறியப் பட்டால் கேன்சர் முழுமையாகக் குணப்படுத்தக் கூடியதே.
நமது உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் உள்ள செல்கள் பிரிந்து கட்டுப்படுத்தப்பட முடியாமல் வளர்வதையே கேன்சர் என்கிறோம். இந்த செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுவதை நோய் இடம் மாறல் (Metastasis) என்கிறோம். கேன்சரில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பொதுவாக கேன்சர் உடல் முழுவதும் பரவினாலும், உடலின் எந்தப் பகுதியில் ஆரம்பிக்கிறதோ, அந்தப் பகுதியின் பெயரிடுத்தான் அழைக்கப் படுகிறது.
கண்ணுக்குள்ளே யாருங்க? கேன்சர் மேல ஒரு கண்ணு வையிங்க!!




















கேன்சர் ஏன்  ஏற்படுகிறது?

பெரும்பாலான  தருணங்களில் இதற்கான காரணம் துல்லியமாகத் தெரிவதில்லை. ஆனால், செல்களில் ஏற்படும் மாற்றங்கள் கேன்சரை ஏற்படுத்துகின்றன. இந்த செல் மாறுதல்கள் பரம்பரையாகவும் வரலாம். அல்லது பிறப்புக்குப் பின்னும் வரலாம்.
நமது நாட்டைப் பொருத்தவரை, கேன்சரைப் பற்றிப் பொதுவான விழிப்புணர்வு இருந்த போதிலும்,  
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் (Gynecologic Cancer) பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பெண்களுக்குப் புற்றுநோய் என்றால் அது மார்பகப் புற்றுநோய் மட்டும்தான் என்ற எண்ணம் படித்தவர்களிடையே கூட நிலவுகிறது.
சில அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களைப் பார்ப்போமா!
  • இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் மரணத்தில் முதலிடம் வகிப்பது --- ஸெர்வைகல் கேன்ஸர் என்றழைக்கப்படும்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.
  • மார்பகப் புற்றுநோயைக் காட்டிலும் இது சர்வ சாதாரணமாக ஏற்படக் கூடியது.
  • ஸெர்வைகல் கேன்ஸரால்  உலகில் மரணமடையும் 4ல் 1 பெண் இந்தியக் குடிமகள்.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் 72,000 பெண்கள் இந்நோயால் மரணமடைகிறார்கள்.
  • இந்தியப் பெண்களிடையே  இப்புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது.
ஸெர்வைகல் கேன்ஸர் என்றால் என்ன?
ஸெர்வைகல் கேன்ஸர் அறிகுறியைக் காட்டும் படம்

    இது கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயாகும். செர்விக்ஸ் என்பது  கர்ப்பப்பையின் நுழைவுப் பகுதியில் உள்ளது. செர்விக்ஸ் கர்ப்பப்பையின் மேல்  பகுதியையும், பிறப்பு வழிப் பாதையும் (the birth canal) இணைக்கிறது. இப்புற்றுநோயை  தொடர்ச்சியான கண்காணிப்பினாலும், பரிசோதனைகளாலும் எளிதில் தடுக்கலாம். ஆரம்ப நிலையில் கண்டறியப் பட்டால் முழுமையாகக் குணப்படுத்தலாம்.
யாருக்கு   ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்படும் ?
அனைத்துப்  பெண்களுக்குமே ஸெர்வைகல் கேன்ஸர் வரும் அபாயம் உள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.ஹுயுமன்  பாப்பிலோமா வைரஸ் ( HPV -Human Papilloma Virus) ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்பட முக்கிய காரணமாகிறது.
ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்
இந்த வைரஸ் உடலுறவின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெரும்பாலோனோர் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளான போதிலும் சில பெண்களுக்கு மட்டுமே ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையோ அல்லது அடையாளங்களையோ காண்பிப்பதில்லை. முற்றிய நிலையில் பெண் பிறப்புறுப்பில் அதிகமான இரத்தப் போக்கு மற்றும் வெள்ளைப் படுதல் ஏற்படலாம். இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரைக்  கலந்தாலோசியுங்கள். தீவிரமான இரத்தப் போக்கு மட்டுமே ஸெர்வைகல் கேன்ஸராய் இருக்காது. ஆனால் நாம் செய்ய வேண்டியது மருத்துவரைக் கலந்தாலோசிப்பது மட்டுமே. வேறு வழி இல்லை.

ஸெர்வைகல் கேன்ஸரால் பாதிக்கப்படும் அபாயம் எப்போது அதிகரிக்கிறது?

 பொதுவாக அனைத்து ஸெர்வைகல் கேன்ஸருக்கும் காரணம் HPV வைரஸ் தான். மிகச் சிறிய வயதிலேயே தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிப்பது, ஒருவர் அல்லது அவரின் துணை அதிகமான நபர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவை இந்நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றது.
HPV வைரஸ்களில் பலவகை உண்டு. இந்த HPV வைரஸ் தாமாகவே நம்மை விட்டு விலகி விடுகின்றன. நம்மை விட்டு விலகாத HPV வைரஸகள் நமக்கு ஸெர்வைகல் கேன்ஸரை  உருவாக்கலாம். மேலும், கீழ்க்கண்ட காரணங்களாலும் இந்நோயின் அபாயம் அதிகரிக்கலாம்.
  • புகைப் பிடித்தல். பொதுவாக இந்தியப் பெண்கள் புகை பிடிப்பதில்லை. ஆனால் பல்வேறு வகைகளில் புகையிலையை உபயோகிக்கிறார்கள் .
  • HIV கிருமித் தாக்குதலுக்கு ஆளாகும் போது 
  • அல்லது வேறு காரணங்களால் நமது நோய் தாங்கும் திறன் குறையும் போது 
  • கர்ப்பத்தடை மாத்திரைகளை 5 வருடங்களுக்கும் மேலாக உபயோகிக்கும் போது 
  • 3 அல்லது 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு 
ஸெர்வைகல் கேன்ஸர் வராமல் தடுப்பதற்கு அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு ஏதாவது பரிசோதனைகள் உள்ளனவா?
இரு விதமான பரிசோதனைகள் உள்ளன.
  1. "பாப் ஸ்மியர்" ( Pap Test or Pap smear) டெஸ்ட்.   - 21 வயதிலிருந்து 65 வயதிற்குள் செய்யலாம்.    
    பாப் ஸ்மியர் டெஸ்ட்
    இப்பரிசோதனை ஸெர்வைகல் கேன்ஸரை மட்டுமே அறியப் பயன்படுகிறது. மற்ற  சில பெண்கள் சம்பந்தமான புற்றுநோய்களையும்  ( gynecologic cancer.) இந்த டெஸ்டினால் கண்டறிய முடியும் .
          2. HPV பரிசோதனை.

HPV பரிசோதனை 



எப்போது இதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்?
 பாப் டெஸ்ட் என்பது நம்பகமானதும், பயனுடையதும் ஆகும். 21 வயதிலிருந்தே தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் பரிசோதனை முடிவுகள் சரியாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அடுத்த மூன்று வருடங்களுக்கு பிறகு  பரிசோதனை செய்தால் போதுமானது .
HPV பரிசோதனை என்பது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பாப் டெஸ்டுடன் செய்து கொள்ளலாம் . 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு HPV பரிசோதனை செய்யும் போது நமக்கு துல்லியமான விவரங்கள் கிடைக்கின்றன.
பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அடுத்த 5 வருடங்களுக்குக் கூட பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை.  
 மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில்,  உங்கள் மருத்துவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.
உங்களுக்கு 65 வயதிற்கு மேலிருந்தாலோ அல்லது நீர்க் கட்டிகள் போன்ற காரணங்களினால் கர்ப்பப்பை அகற்றப் பட்டிருந்தாலோ  இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவித்து அவரின் வழிகாட்டுதல் படி நடவுங்கள்.
நான் எவ்வாறு என்னை தற்காத்துக் கொள்ள முடியும்?


இதற்கான தடுப்பூசி தற்போது உள்ளது. பெண் குழந்தைகளுக்கு 9 வயதிலிருந்தே இதை அளிக்கலாம் . உங்களது மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவரின் வழிகாட்டுதல் படி HPV தடுப்பூசி அட்டவணையைக் கேட்டுப் பெறுங்கள்.

உங்கள் மருத்துவரை அடிக்கடி சந்தித்து PAP பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

"பாப் ஸ்மியர்"  பரிசோதனை இயல்பாக இல்லாமல் இருந்தால் உங்கள் மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றுங்கள்.

புகையிலையைப் பயன்படுத்தாதீர்கள்.

உடலுறவின் போது ஆணுறை அணிந்து கொள்ளுங்கள்.

உங்களது வாழ்க்கைத் துணையை வழி மாறாமல் இருக்க அறிவுறுத்துங்கள்.















0 comments:

கருத்துரையிடுக