வெள்ளி, நவம்பர் 14, 2014


ஸெர்வைகல் கேன்ஸர் அறிவோம்! (கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்)


“மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா”, என்றார்கவிமணி. ” மக்கள் தொகையில் சம பங்குள்ள பெண்களைப் புறக்கணிக்கும் எந்தச்சமூகமும் உயர்வடையாது” என்றார் லெனின்.ஆனால், உண்மையில் நமது பெண்கள்மீதும், அவர்தம் ஆரோக்கியம் மீதும் நாம் அக்கறை கொள்கிறோமா?
சுதந்திர இந்தியாவில், தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுபிரச்சாரங்கள் பெண்கள் உரிமை, கல்வி ஆரோக்கியம் போன்றவற்றில் சிலமாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்த போதிலும், தற்போது நமது பெண்களைசத்தமில்லாமல் தாக்கும் நோய் “ஸெர்வைகல் கேன்ஸர்” எனப்படும் “கர்ப்பப்பைவாய் புற்றுநோய்” ஆகும். இது அனேகமாக மேற்க்கத்திய நாடுகளில் ஒழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். சுகாதாரமான தண்ணீர், கழிப்பிட வசதி, பெண்கள்தங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை (Personal Hygiene)பேணிகாக்க வசதி போன்றஅடிப்படை வசதிகள் மேற்கத்திய பெண்களுக்கு கிடைத்தது கூட ஒரு காரணமாய்இருக்கலாம்.
நமது பெண்களை இந்நோயில் இருந்து காக்கும் கடப்பாடு நமது சமூகத்திற்கு உண்டு. இதைப் பற்றி மேலும் தெளிவு பெற
மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவ நிபுணர்
டாக்டர். S. ஜீவா M.B.B.S., DGO.,DNB (Obs& Gynae) அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
Dr.Jeeva photo
Dr.(Mrs.) S. ஜீவா M.B.B.S., DGO., DNB (Obs & Gynae)அவர்கள் தமது M.B.B.S படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பயின்றவர். மேலும் மகப்பேறு மருத்துவத்தில் பட்டயப்படிப்பைமணிபால் கஸ்தூரிபாய்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவுசெய்தவர். மகப்பேறு மற்றும் மகளிர்  நலன் துறையில் கடந்த 15வருடங்களாக தனதுசேவையைப் புரிந்து வருகிறார்.ஸெர்வைகல் கேன்ஸர்பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவர். தற்போது கோவை பி. எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர்  நலப் பிரிவில்பேராசிரியராகப்  பணிபுரிந்து வருகிறார்.
மேலும் தொடர்புக்கு:0422 – 4345130
அவரிடம் பேசியதிலிருந்து:
டாக்டர்  கேன்சர் என்றால் என்ன?
cervical cancer keep an eye
கேன்சர்! இந்தச் சொல்லைச் சொல்லும்போதே நமக்குள் ஒரு பதட்டம்குடிகொள்கிறது. நமது சினிமாக்களும் தமது பங்கிற்கு இந்நோயை மிகப் பெரியஆட்கொல்லி நோயாக நம்மிடையே சித்தரித்துள்ளன. உண்மையில், ஆரம்ப நிலையில்கண்டறியப் பட்டால் கேன்சர் முழுமையாகக் குணப்படுத்தக் கூடியதே.
நமது உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் உள்ள செல்கள்பிரிந்துகட்டுப்படுத்தப்பட முடியாமல் வளர்வதையே கேன்சர் என்கிறோம். இந்த செல்கள்உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுவதை நோய் இடம் மாறல் (Metastasis) என்கிறோம். கேன்சரில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பொதுவாக கேன்சர்உடல் முழுவதும் பரவினாலும், உடலின் எந்தப் பகுதியில் ஆரம்பிக்கிறதோ, அந்தப்பகுதியின் பெயரிடுத்தான் அழைக்கப் படுகிறது.
கேன்சர் ஏன்  ஏற்படுகிறது?
பெரும்பாலான  தருணங்களில் இதற்கானகாரணம் துல்லியமாகத் தெரிவதில்லை.ஆனால், செல்களில் ஏற்படும் மாற்றங்கள் கேன்சரை ஏற்படுத்துகின்றன. இந்த செல்மாறுதல்கள் பரம்பரையாகவும் வரலாம். அல்லது பிறப்புக்குப் பின்னும் வரலாம்.
நமது நாட்டைப் பொருத்தவரை, கேன்சரைப் பற்றிப் பொதுவான விழிப்புணர்வு இருந்த போதிலும்,  
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் (Gynecologic Cancer) பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பெண்களுக்குப் புற்றுநோய் என்றால்அது மார்பகப் புற்றுநோய் மட்டும்தான் என்ற எண்ணம் படித்தவர்களிடையே கூடநிலவுகிறது.
சில அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களைப் பார்ப்போமா!
  • இந்தியாவில்பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் மரணத்தில் முதலிடம் வகிப்பது —ஸெர்வைகல் கேன்ஸர் என்றழைக்கப்படும்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.
  • மார்பகப் புற்றுநோயைக் காட்டிலும் இது சர்வ சாதாரணமாக ஏற்படக் கூடியது.
  • ஸெர்வைகல் கேன்ஸரால்  உலகில் மரணமடையும் 4ல் 1 பெண் இந்தியக் குடிமகள்.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் 72,000 பெண்கள் இந்நோயால் மரணமடைகிறார்கள்.
  • இந்தியப் பெண்களிடையே  இப்புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது.
ஸெர்வைகல் கேன்ஸர் என்றால் என்ன?
cervicalcancersymptom
 இது கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயாகும். செர்விக்ஸ்என்பது  கர்ப்பப்பையின் நுழைவுப் பகுதியில் உள்ளது. செர்விக்ஸ்கர்ப்பப்பையின் மேல்  பகுதியையும், பிறப்பு வழிப் பாதையும் (the birth canal) இணைக்கிறது. இப்புற்றுநோயை  தொடர்ச்சியான கண்காணிப்பினாலும், பரிசோதனைகளாலும் எளிதில் தடுக்கலாம். ஆரம்ப நிலையில் கண்டறியப் பட்டால்முழுமையாகக் குணப்படுத்தலாம்.
யாருக்கு   ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்படும் ?
அனைத்துப்  பெண்களுக்குமே ஸெர்வைகல் கேன்ஸர் வரும் அபாயம் உள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.ஹுயுமன்  பாப்பிலோமாவைரஸ் ( HPV -Human Papilloma Virus) ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்பட முக்கியகாரணமாகிறது.
cervical-cancer
இந்த வைரஸ் உடலுறவின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெரும்பாலோனோர் தங்கள் வாழ்க்கையில் ஒருகட்டத்திலாவது இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளான போதிலும் சில பெண்களுக்குமட்டுமே ஸெர்வைகல் கேன்ஸர் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையோ அல்லது அடையாளங்களையோ காண்பிப்பதில்லை.முற்றிய நிலையில் பெண் பிறப்புறுப்பில் அதிகமான இரத்தப் போக்கு மற்றும்வெள்ளைப் படுதல்ஏற்படலாம். இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாகஉங்கள் மருத்துவரைக்  கலந்தாலோசியுங்கள்.தீவிரமான இரத்தப் போக்கு மட்டுமே ஸெர்வைகல் கேன்ஸராய் இருக்காது.ஆனால் நாம் செய்ய வேண்டியது மருத்துவரைக் கலந்தாலோசிப்பது மட்டுமே. வேறு வழி இல்லை.
ஸெர்வைகல் கேன்ஸரால் பாதிக்கப்படும் அபாயம் எப்போது அதிகரிக்கிறது?
cervical-cancer-risk
பொதுவாக அனைத்து ஸெர்வைகல் கேன்ஸருக்கும் காரணம் HPV வைரஸ் தான். மிகச்சிறிய வயதிலேயே தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிப்பது, ஒருவர் அல்லது அவரின்துணை அதிகமான நபர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவை இந்நோயின் அபாயத்தைஅதிகரிக்கின்றது.
HPV வைரஸ்களில் பலவகை உண்டு. இந்த HPV வைரஸ் தாமாகவே நம்மை விட்டு விலகிவிடுகின்றன. நம்மை விட்டு விலகாத HPV வைரஸகள் நமக்கு ஸெர்வைகல் கேன்ஸரை  உருவாக்கலாம். மேலும், கீழ்க்கண்ட காரணங்களாலும் இந்நோயின் அபாயம்அதிகரிக்கலாம்.
  • புகைப் பிடித்தல். பொதுவாக இந்தியப் பெண்கள் புகை பிடிப்பதில்லை. ஆனால் பல்வேறு வகைகளில் புகையிலையை உபயோகிக்கிறார்கள் .
  • HIV கிருமித் தாக்குதலுக்கு ஆளாகும் போது
  • அல்லது வேறு காரணங்களால் நமது நோய் தாங்கும் திறன் குறையும் போது
  • கர்ப்பத்தடை மாத்திரைகளை 5 வருடங்களுக்கும் மேலாக உபயோகிக்கும் போது
  • 3 அல்லது 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு
ஸெர்வைகல் கேன்ஸர் வராமல் தடுப்பதற்கு அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு ஏதாவது பரிசோதனைகள் உள்ளனவா
இரு விதமான பரிசோதனைகள் உள்ளன.
cervical-cancer-s8-photo-of-pap-smear-test
  1. “பாப் ஸ்மியர்” (Pap Test or Pap smear) டெஸ்ட்.   – 21 வயதிலிருந்து 65 வயதிற்குள் செய்யலாம்.   இப்பரிசோதனை ஸெர்வைகல் கேன்ஸரை மட்டுமே அறியப் பயன்படுகிறது. மற்ற  சிலபெண்கள் சம்பந்தமான புற்றுநோய்களையும்   ( gynecologic cancer.) இந்தடெஸ்டினால் கண்டறிய முடியும் .
cervical-cancer-s10-photo-of-dna-analysis2.HPV பரிசோதனை.
எப்போது இதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்?
 பாப் டெஸ்ட் என்பது நம்பகமானதும், பயனுடையதும் ஆகும். 21 வயதிலிருந்தேதொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்குபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.உங்கள் பரிசோதனை முடிவுகள் சரியாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அடுத்தமூன்று வருடங்களுக்கு பிறகு  பரிசோதனை செய்தால்போதுமானது .
HPV பரிசோதனை என்பது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பாப் டெஸ்டுடன்செய்து கொள்ளலாம் . 30 வயது மற்றும் அதற்கு
 மேற்பட்ட பெண்களுக்கு HPV பரிசோதனை செய்யும் போது நமக்கு துல்லியமான விவரங்கள் கிடைக்கின்றன.
பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அடுத்த 5 வருடங்களுக்குக் கூட பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை. 
மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில்,  உங்கள் மருத்துவர் மட்டுமே   முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.
உங்களுக்கு 65 வயதிற்கு மேலிருந்தாலோ அல்லது நீர்க் கட்டிகள் போன்றகாரணங்களினால் கர்ப்பப்பை அகற்றப் பட்டிருந்தாலோ  இதைப் பற்றி உங்கள்மருத்துவரிடம் தெரிவித்து அவரின் வழிகாட்டுதல் படி நடவுங்கள்.
நான் எவ்வாறு என்னை தற்காத்துக் கொள்ள முடியும்?
இதற்கானதடுப்பூசி தற்போது உள்ளது. பெண் குழந்தைகளுக்கு 9 வயதிலிருந்தே இதைஅளிக்கலாம்.உங்களது மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவரின் வழிகாட்டுதல்படி HPV தடுப்பூசி அட்டவணையைக் கேட்டுப் பெறுங்கள்.
உங்கள் மருத்துவரை அடிக்கடி சந்தித்து PAP பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
“பாப் ஸ்மியர்”  பரிசோதனை இயல்பாக இல்லாமல் இருந்தால் உங்கள் மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றுங்கள்.
புகையிலையைப் பயன்படுத்தாதீர்கள்.
உடலுறவின் போது ஆணுறை அணிந்து கொள்ளுங்கள்.
உங்களது வாழ்க்கைத் துணையை வழி மாறாமல் இருக்க அறிவுறுத்துங்கள்.


கொளந்தைய சாக்கிரதயா பாத்துக் கோனுங்கொ,

அத விட நமக்கு என்ன வேலைங்கொ !

“குழந்தைகளை என்னிடத்தில் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களை சார்ந்தது ” என்றொரு பைபிள் வாசகம் உள்ளது. குழந்தைகளைப் பற்றிய கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகள் உலகப் பிரசித்தம் பெற்றவை. நாம் ஒவ்வொருவருமே கவனத்தில் கொள்ள வேண்டிய வார்த்தைகள் அவை.
photo saranya
நமது கனவுகளையும், ஆசைகளையும் நமது குழந்தைகள் மேல் திணிக்கிறோம் . அல்லது அவர்களுக்கு நலமான வாழ்க்கையை தரவேண்டும், நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை மிகுந்த சோர்வுக்கு உள்ளாக்குகிறோம். இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு மிகச் சிறிய வயதிலேயே மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம். ” அங்கிளுக்கு ஹாய் சொல்லு”, ” எங்கே ஆண்டிக்கு ஸ்தோத்திரம் சொல்லிக் காமி “, ” எம்பொண்ணுக்கு ரெண்டு வயசுதா ஆச்சு. அதுக்குள்ளே எல்லாப் பாட்டும் அத்துப்படி ” என்பது போன்ற உரையாடல்களை நாம் சர்வ சாதாரணமாக எதிர் கொள்கிறோம்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் நமது பங்கு என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன போன்ற விசயங்களில் நாம் அக்கறை கொள்ள வேண்டியதிருக்கிறது. மேலும் அறிந்து கொள்ள

பச்சிளங்குழந்தை நிபுணர் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர். சரண்யா செல்வன் MBBS., MD (Paed)

அவர்களை சந்தித்தோம்.
திருமதி. சரண்யா செல்வன் தனது MBBS படிப்பை கோவை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். மேலும் சிறப்பு நிலை படிப்பாக குழந்தை மருத்துவத்தில் முது நிலைப் பட்டத்தை மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். குழந்தை மருத்துவத் துறையில் ஆகப் பெரிய திட்டங்களோடு ஆர்வத்துடன் செயல் புரிந்து கொண்டிருக்கிறார்.
தற்போது G.S.N.R. Child Care Centre என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
மேலும் தொடர்புக்கு;
G.S.N.R.Child Care Centre,
இலக்கம் 349, காமராஜர் சாலை,
லயன்ஸ் பஸ் ஸ்டாப் அருகில்,
கோயமுத்தூர்- 641 015
போன் : 0422-4216599
அவருடன் பேசியதிலிருந்து:
டாக்டர், குழந்தை பிறந்ததிலிருந்து இரண்டு வயது வரை குழந்தை பராமரிப்பில் நாம் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன? ஏனெனில் முதல் இரண்டு வருடங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியம் அல்லவா?
ஆம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் 1000 நாட்கள் மிக முக்கியமானது. தற்போது ‘முதல் 1000 நாட்கள்’ என்ற கோட்பாடு பிரபலமாகி வருகிறது. முதல் 1000 நாட்கள் என்பது குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் காலத்தையும், முதல் இரண்டு வருடங்களையும் சேர்த்தது. ஏனெனில் இக்கால கட்டத்தில்தான் மனித மூளையின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். எனவே, அந்த வளர்ச்சிக்கு தேவையான அளவு ஊட்டச் சத்தையும் கொடுக்க வேண்டியதிருக்கிறது.
முதல் 1000 நாட்களைப் பற்றி மேலும் சொல்லுங்களேன்?
குழந்தை கர்ப்பத்தில் உள்ள காலத்திலிருந்து இரண்டாவது பிறந்த நாள் வரை நாம் காட்டும் அக்கறை, அக்குழந்தையின் வளர்ச்சி, கற்கும் திறன் ஆரோக்கியம் போன்றவைகளை தீர்மானிக்கிறது.
கர்ப்ப காலத்தில் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி சரியான முறையில் அமையாமல் போகலாம்.
இரண்டு வயதிற்குள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் நோய் பாதுகாப்புத் திறன் பாதிக்கக் கூடும். இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
எனவேதான் முதல் 1000 நாட்களை நாம் கவனத்துடன் அணுகவேண்டியதிருக்கிறது. உங்கள் மகப்பேறு மருத்துவரிடமும், குழந்தை மருத்துவரிடமும் ஆலோசனை பெறுங்கள். அதன் படி நடக்க உறுதி பூணுங்கள்.
நம் எல்லோருக்குமே நமது குழந்தைகள் Prodigy Child ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நமது குழந்தை அதி தீவிர புத்திசாலி குழந்தையாக வளர ஏதாவது வழி இருக்கிறதா?
350f70b58d96bc6c2e75f0ead9c7178b
Prodigy Child என்கின்ற அதி தீவிர புத்திசாலிக் குழந்தை என்பதற்கான அறிவியல் விளக்கம் வேறு. பொதுவாக, ஒரு குழந்தை குறிப்பிட்ட ஒரு துறையிலோ அல்லது பல்வேறு துறைகளிலோ நிபுணத்துவம் பெற்றிருந்தால், அக்குழந்தையை Prodigy Child என்று சொல்லலாம். உதாரணமாக ஒரு நாற்பது வயது இசைக் கலைஞருக்குரிய இசை ஞானம் ஒரு எட்டு வயது குழந்தைக்கோ அல்லது ஒரு பத்து வயது குழந்தைக்கோ இருக்கலாம். இதற்கு முக்கிய காரணம் அக்குழந்தையின் ஜீன் அதாவது மரபணு. இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒரு குழந்தையை புத்திசாலியாக, நடை முறை வாழ்க்கைக்கு தேவையான அறிவுள்ளதாக, ஆரோக்கியமாக வளர நம்மால் உதவ முடியும். இதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளன.
        • சுற்றுச் சூழல்
        • நல்ல ஆரோக்கியமான சமச்சீரான உணவு பழக்கம்
        • நல்ல பெற்றோர் தன்மை
எல்லா தாய்மார்களுமே புலம்பும் விஷயம் ,” என் குழந்தை சரியாவே படிக்க மாட்டேன் என்கிறான் ” என்பது தான். குழந்தைகள் நன்றாகப் படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஏற்கெனவே குறிப்பிட்ட படி குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. உணவு முறைகளைப் பொருத்தவரை , மூளை வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை அறிவுத் திறன் மிகுந்த ஊட்ட உணவு ( Smart Nutrients) என்கிறார்கள்.
வைட்டமின் A செறிந்துள்ள உணவுகளை கொடுங்கள்.
GYO – Green, Yellow, Orange – வண்ணமுள்ள உணவுப் பொருட்கள் , உதாரணமாக , பச்சை காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவை.
இரும்புச் சத்து, Folic Acid செறிந்துள்ள உணவுப் பொருட்கள் – மீன், இறைச்சி, ஓட்ஸ், கீரைகள் போன்றவற்றில் இரும்புச் சத்து செறிந்துள்ளது.
காய்கறிகள், பருப்பு வகைகளில் Folic Acid செறிந்துள்ளது.
Omega 3 Fatty Acid – பச்சை இலை காய்கறிகள், உதாரணமாக முட்டை கோஸ் போன்றவை, வால்நட், ஆலிவ் எண்ணெய் போன்றவை.
ஸ்ட்ராபெரீஸ்
நார்சத்து உள்ள உணவுகள் – ஆரஞ்சு, பிளம்ஸ், ஆப்பிள் போன்றவை.
இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் ஞாபக சக்தியையும் அதிகப் படுத்தும். கவனக் குறைவையும் போக்கும். சரியான உணவை பற்றி மேலும் அறிய உங்கள் குழந்தை மருத்துவரை லந்தாலோசியுங்கள். உங்கள் குழந்தையின் வயது, நோய் தாங்கும் திறன் போன்ற பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொண்டு நல்ல ஆலோசனையை அவர் வழங்குவார். நீங்களாகவே எதையும் முடிவு செய்ய வேண்டாம்.
நமது குழந்தைகளின் உடல் நலனிற்கும், புத்திக் கூர்மைக்கும் என்ன விதமான உணவுகளை கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக் கூடாது?
67c69a67fd9474b11b18ab6cad5f0d88 (1)
உணவு அளிப்பதில் மிக முக்கியம் என்னவெனில் ஒரே மாதிரியான உணவுகளை தராமல் வெவ்வேறு விதமான உணவுகளைத் தாருங்கள். ஒரு குறிப்பிட்ட உணவுக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று விதமான உணவுகளை உண்ணப் பழக்குங்கள். குழந்தைகள் உணவை வெறுப்பதில்லை. கொஞ்சம் வித்தியாசமாக உணவை மாற்றுங்கள். உதாரணமாக தோசையை வட்டமாக மட்டும் வார்க்காமல், ஸ்டார் வடிவத்திலோ அல்லது முக்கோண வடிவத்திலோ காய் கறிகளை மூக்கு கண் என்று ஒட்ட வைத்தோ கலந்து கொடுங்கள்.
குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும், அதாவது ஒரு வயது முதல் 18 வயது வரை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? அவர்களின் உடல் நலத்திற்கு தூக்கம் ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், தற்போதைய சூழலில் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அவர்களின் தூக்க நேரம் மிகக் குறைவாக உள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் அவசியம். தூக்கம் குறையும் போது அவர்கள் எரிச்சல் அடைவார்கள். கோபப்படுவார்கள். பள்ளிக் கூடத்தில், பாடத்தில் கவனம் செலுத்த மிகவும் கஷ்டப் படுவார்கள். கவனிக்கும் திறன் குறையும். மறதி அதிகரிக்கும். செயல் திறன் பாதிக்கும்.
குழந்தைகளின் தூக்க நேரம் வயது வாரியாக;
பிறந்ததிலிருந்து 3 மாதங்கள் வரை —- 16 – 20 மணி நேரம்
3 – 6 மாதம் வரை — 13 மணி நேரங்கள், பகலில் 4-5 மணி நேரம், இரவில் 8-9 மணி நேரம்.
6 மாதத்திலிருந்து 1 வயது வரை — 9 – 11 மணி நேரம்
1 லிருந்து 6 வயது வரை — 10-13 மணி நேரம் , பகலில் 1-2 மணி நேரம், இரவில் 8-10 மணி நேரம்.
6 லிருந்து 12 வயது வரை —- 9-11 மணி நேரம்.
பதின் பருவம், 13- 19 வயது வரை —- 8 1/2 – 9 1/2 மணி நேரம் .
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப் பழக்குங்கள். தூங்குவதற்கு முன்பு கதை படித்தல், மெலிதான இசையைக் கேட்கச் செய்தல் போன்றவை அவர்களுக்கு நல்ல தூக்கத்தை தரும்.
தற்போதைய காலங்களில் சிறு குழந்தைகளின் மீதே கூட பாலியல் வன்முறை, வல்லுறவு கொள்ளுதல் போன்றவை நடக்கின்றன. நமது குழந்தைகளை அம்மாதிரியான அபாயங்களிலிருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? Good touch, Bad Touch போன்ற விஷயங்களை எந்த வயதிலிருந்து சொல்லி தர வேண்டும்?
Good touch
குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற விஷயங்களைப் பற்றி நாம் அவ்வளவாக கவனம் கொள்வதில்லை. ஆனால், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் இது. இதுமாதிரியான விஷயங்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தைகள் பயப்படுவதுதான். குழந்தைகளை எளிதில் பயப் படுத்தப் முடியும். ‘ வெளியில் சொன்னால் கொன்று விடுவேன், உன் அப்பா அம்மாவைக் கொன்று விடுவேன்’ என்று அவர்களைப் பயப்படுத்தினால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.
இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில்
பெரும்பாலான தாக்குதல்கள் வீட்டில்தான் நடக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் உடல் ரீதியாக துன்படுத்தப் படுகிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட , அதாவது 53 % குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் படுகிறார்கள். இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு கிடையாது.
குழந்தைகளை கவனித்துக் கொண்டே இருங்கள். அதை விட நமக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை.
குழந்தைகள் கோபமாகவோ அல்லது சோகமாகவோ இருந்தால் அதற்கான காரணத்தை அறிய முற்படுங்கள்.
கெட்ட கனவுகளால் அவதிப் படுகிறார்களா என்று கவனியுங்கள்.
சரியாகத் தூங்குகிறார்களா என்று கவனியுங்கள்.
பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரத் தயக்கம் காட்டுகிறார்களா என்று கவனியுங்கள்.
பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களால் அல்லது பெரிய மாணவர்களால் துன்புறுத்தப் படுகிறார்களா என்பதைக் கவனியுங்கள். அதைப் பற்றி தைரியமாக உங்களிடம் பேச ஊக்கப் படுத்துங்கள்.
சக மாணவர்கள் உங்கள் குழந்தையை துன்புறுத்தும் போது அதைப் பற்றி ஆசிரியரிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள்.
உங்கள் குழந்தை செல்போன், வீடியோ கேம் , பணம், தின்பண்டம் போன்றவைகளை பள்ளிக்கு எடுத்துச் செல்லக் கூடும். இதுகூட துன்புறுத்தலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே அவைகளை தடை செய்யுங்கள்.
துன்புறுத்தும் பிள்ளைகளின் பெற்றோரிடம் பேசுங்கள்.
எப்போதும் உங்கள் குழந்தையை தனியாக இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். பள்ளிக்கூடத்தில் பாத்ரூமுக்கு செல்லும் போது கூட இரண்டு அல்லது மூன்று பேராக போகச் சொல்லுங்கள்.முதுகில் காயம், கண்ணின் கீழ் கரு வளையம், எலும்பு முறிவு போன்றவை நமது குழந்தை மிக அபாயகரமான கட்டத்தை எட்டி விட்டதாக அர்த்தம்.குட் டச், பேட் டச் போன்றவைகளை சீக்கிரம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புரிய வைத்து விடுங்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப் பெரிய விஷயம். இதில் சுற்றுசூழல், சமுதாயம், பெற்றோர் கடமை போன்ற பல்வேறு காரணிகள் செயல் புரிகின்றன. கலீல் ஜிப்ரான் கூறியபடி,5b07c36aa049b6e85a9b1df394c83da6
“உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால
வாழ்வின் மகன், மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்;
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் -
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் – ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கியோ
நேற்றைக்கோ செல்வதில்லை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும்
வாழும் அம்புகள் அனுப்பபடும்
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!”


தாய்ப்பால்!

loving-mother10இயற்கை அளித்த அருட்கொடை அது. உலகத்தில் மிகச் சிறந்தது தாய்ப்பாலே.தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறிந்ததே. இருந்த போதிலும் தாய்ப்பாலைப்பற்றிய நமது சந்தேகங்களும் அதிகமே. தாய்ப்பால் எப்போதிருந்து கொடுக்கவேண்டும், தாய்ப்பாலைக் கொடுப்பதற்கு முன்பு நாம் என்னென்ன செய்ய வேண்டும், பொதுவாக தாய்ப்பால் கொடுப்பதில் நமது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்என்னென்ன போன்றவைகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக நாம் அறிந்து கொள்ளவேண்டியதிருக்கிறது. இதன் பொருட்டு நமது சந்தேகங்களை
குழந்தை நல நிபுணர்டாக்டர்,திருமதி. அம்பிகா ஸ்ரீ காந்த் M.B.,B.S., D.C.H., அவர்கள் முன் வைத்தோம்.
ambika
டாக்டர் .திருமதி. அம்பிகா ஸ்ரீ காந்த் M.B.,B.S., D.C.H.,
அவர்கள் தமது M.B.,B.S., படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பயின்றவர். குழந்தை நலனுக்கான பட்டய மேற்படிப்பை கோவைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்தவர். கடந்த 8 வருடங்களுக்கும்மேலாக குழந்தை நல மருத்துவத்தில் தனது சேவையைப் புரிந்து வருகிறார்.குழந்தை மருத்துவம் மற்றும் அது தொடர்பான துறைகளில் ஆகப் பெரியதிட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் தொடர்புக்கு:
ஸ்ரீ பாலா மெடிக்கல் சென்டர்,
901, திருச்சி ரோடு,
கோவை – 641 045
போன்: 0422-2316572, 2323333.
அவரிடம் பேசியதிலிருந்து:
குழந்தை பிறந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே தாய்ப்பால் அளிக்கப் பட வேண்டும்.
முக்கியமான விஷயம் என்னவெனில் தாய்ப்பால் மட்டுமே அளிக்கப் பட வேண்டும்.
வேறு எதுவும், குறிப்பாக சர்க்கரை, விளக்கெண்ணெய், பசும்பால், தேன்போன்றவைகளை தரவே கூடாது. தாய்ப்பால், தாய்ப்பால் மட்டுமே பிறந்தகுழந்தைக்கு உகந்தது. சீம்பாலை ஒரு குழந்தை தவறவே விடக் கூடாது.
டாக்டர், ஏன் தாய்ப்பால் அவ்வளவு முக்கியம்?
1-breastfeeding-
தாய்ப்பால் சுத்தமானது. கலப்படமில்லாதது. கலப்படம் செய்ய முடியாதது.
குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது.
நோய்க் கிருமிகளை எதிர்க்கும் வல்லமை தாய்ப்பாலுக்கு மட்டுமே உள்ளது.
தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளை விட தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக புத்திசாலிகளாகத் திகழ்வார்கள்.
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று, குண்டாகும் தன்மை, அதிக மன அழுத்தம் (Hyper Tension), சர்க்கரை நோய்த் தாக்கும் அபாயம்போன்றவை குறைவாகவே உள்ளது.முக்கியமாக தாய்க்கும் குழந்தைக்கும் மன ரீதியான நெருக்கத்தை ( Emotional bonding) ஏற்படுத்துகிறது.
டாக்டர், தாய்பாலைத்தருவதற்கு ஒரு தாய் எவ்வாறு தயாராவது?
1-breastfeeding-advice-
எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னதான் கம்ப்யூட்டர் எஞ்சினியராகஇருந்தாலும் அவரவர் குழந்தை என்று வரும்போது எல்லாப் பெண்களுமேபதட்டமடைகிறார்கள். போதும் போதாதற்கு பார்க்கும் அனைவரும் அவரவர்தகுதிக்கேற்ப free advice களை அள்ளி வீசிவிட்டுப் போய்விடுவார்கள். ” அந்தக் காலத்திலே எங்களுக்கு எல்லாம் எவ்ளவு பிரச்சின? இப்ப அந்த மாரியா?” என்பதில் ஆரம்பித்து ,” இப்படித்தான் என் அக்காவோட மச்சினன் பொண்ணுபால்கொடுக்கும் போது பொரையேரி …” என்று நம் வயிற்றில் புளியைக் கரைப்பார்கள்.ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை. குழந்தைக்குப் பாலூட்டுதல் என்பது இயல்பானசெயல்.
உண்மையில் ஒரு பெண் கர்ப்பமாய் இருக்கும்போதே, மகப்பேறு மருத்துவரிடம் தனதுமார்பகத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்புக் காம்புகளில்வெடிப்புகள் உள்ளனவா அல்லது மார்புக் காம்புகள் உள் அழுந்தி உள்ளனவா என்றுபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கை:குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இவைஇரண்டும் அவசியம். ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் உங்களை தயார் செய்துகொள்ளுங்கள். மார்பக அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும்எந்தவிதசம்பந்தமும் இல்லை.
தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய தூண்டுதலே குழந்தை முட்டி முட்டிப் பால்குடிப்பதுதான். எனவே குழந்தையின் வாயை மார்புக் காம்பில் வைத்து நன்றாகஉறிஞ்ச விடுங்கள். குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் விரும்புகிறதோஅவ்வளவுக்கு அவ்வளவு பால் சுரக்கும். உங்களிடம் உள்ள பாலை முழுவதும்கடைசிச் சொட்டு வரை கொடுங்கள். இது மீண்டும் பால் ஊறுவதற்கு மிக முக்கியதூண்டுதலாய் இருக்கும்.
பால் ஊறுவதற்க்கும், பாலை வெளியேற்றுவதற்கும் நமது உடலில் உற்பத்தியாகும்ஹார்மோன்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. எனவே மனதை தைரியமாகவும்ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதளவில் உங்கள் குழந்தையைநினைக்கும் போதே பால் ஊறி விடும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர்குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் எந்தவிதப் பிரச்சினைகளும்  ஏற்படாது.
சத்துள்ள, ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும். எந்த விதமான உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை.
பால் ஊறுவதற்கென்று விசேஷமான இயற்கை உணவு அல்லது செயற்கை உணவு எதுவும்இல்லை. ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்ளுவதன் மூலம் பால் அதிகமாக ஊறும்என்பதற்கான எந்த வித மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை.
பாட்டில் பாலுக்கும் தாய்ப்பாலுக்கும்?
பாட்டில் பாலையும் தாய்ப்பாலையும்நீங்கள் ஒப்பிடவேஒப்பிடாதீர்கள்.இது வேறு அது வேறு. உண்மையில் என்ன நடக்கின்றதென்றால், மிக ஆரம்ப நிலையில்பால் புட்டியில் பால் புகட்டும் போது, குழந்தைக்கு குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. எது தாயின் மார்புக் காம்பு எது பாட்டில் நிப்பிள் என்று அதுதிணறுகிறது. ஆனால், அது பாட்டில் நிப்பிளையேவிரும்புகிறது. ஏனெனில், தாயின் மார்பிலிருந்து அது உறிஞ்ச வேண்டும். அதற்கு அது அதிக சக்தியைபிரயோகிக்க வேண்டும். ஆனால், பாட்டிலில் அது உறிஞ்சத் தேவையில்லை. எனவே, பாட்டில் பாலைத் தவிர்த்து குழந்தையை தாய்ப்பால் பருக பழக்குங்கள்.
கவனியுங்கள், பாட்டில் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காது சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படலாம்.ஜாக்கிரதை.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் எவ்வளவு கொடுக்க வேண்டும்?
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றஅவசியம் இல்லை.அதைப் போலவே நமது பெண்களுக்கு, குழந்தை நிறைய முறை ஒன்பாத்ரூம் போகிறது அல்லது அதிக முறை டூ பாத்ரூம் போகிறது அல்லது டூ பாத்ரூமேபோகமாட்டேங்கிறது என்ற சந்தேகமும் இருக்கிறது.குழந்தை சுறுசுறுப்பாகவும்நன்றாக பால் குடிக்கும் வரையிலும் நாம் இதைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை.
குழந்தைக்குப் போதுமான அளவு பால் இருக்கின்றதா இல்லையா என்பதை எப்படி அறிவது?
குழந்தை சீரான அளவில், தேவையான அளவிற்கு எடை கூடுகிறதா என்பதைக் கவனியுங்கள்.
ஒரு நாளைக்கு 6 முதல் 8 தடவை ஒன்பாத்ரூம் போகிறதா என்பதைக் கவனியுங்கள்.
ஒரு மார்பில் பால் அருந்தும் போதுமற்றொரு மார்பில் பால் வழிகிறதா என்பதைக் கவனியுங்கள்.
இவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு போதுமான அளவிற்கு பால்கிடைக்கிறது என்று பொருள். இதைத் தவிர்த்து குழந்தை இரவில் தூங்காமலதவித்தாலோ அல்லது அழுது கொண்டே இருந்தாலோ பால் போதவில்லை என்றுஅர்த்தமில்லை. நமது குழந்தை இந்த உலகத்தோடு பழக மூன்று நான்கு மாதங்கள்ஆகும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு முறை பால் கொடுக்க வேண்டும்?
இதற்கெல்லாம் கணக்கு எதுவும் இல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுகொடுங்கள். ஆனால் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்காவது பால் கொடுங்கள்.முதல் 4 மாதத்திலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். ஆறுமாதங்களுக்குப் பிறகு வேண்டுமானால் கஞ்சி, கூழ் போன்ற திட திரவ உணவுகளைஆரம்பிக்கலாம்.
பாலூட்டும் போது பொதுவாக ஏற்படும் பிரச்சினைகள்?
– மார்புக் காம்புகளில் புண் இருத்தல். (Sore Nipple) – அடிக்கடிசோப் மற்றும் தண்ணீர் விட்டுக் கழுவாதீர்கள். மார்பகத்தை உலர்வாகவும்சுத்தமாகவும் வைத்திருங்கள்.
– பால் கட்டிக் கொள்ளுதல்.குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டுங்கள். சூடான ஒத்தடம் கொடுங்கள்.
– பால் கதக்குதல் . சில சமயங்களில் இது இயல்பே. குழந்தைக்கு எடைகூடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லாத வரை நீங்கள் கவலைப் படத்தேவையில்லை. குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொள்ளுங்கள். இது வாயுவைவெளியேற்ற உதவும்.


thyroid-symptoms-and-solutions-s2

தைராய்டு அறிவோம்!
அர்ஜென்டினா அதிபர் திருமதி. கிறிஸ்டினா பெர்னான்டஸ், பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒப்ரா வின்பிரே, அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோர் அவர்களின் துணைவியார் டிப்பர் கோர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் அவரது துணைவியார் பார்பரா புஷ் இவர்களிடையே ஓர் ஒற்றுமை உள்ளது. இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
thyroid-disorder-400x400
தைராய்டு கோளாறுகள் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களும் வயதானவர்களும் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். பெண்கள் இதன் பெயரைக் கேட்டதுமே பதட்டமடைகிறார்கள். கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலும் தைராய்டாய் இருக்குமோ என்று அச்சம் கொள்கிறார்கள். எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ‘ நாளமில்லாச் சுரப்பி நிபுணர்’ டாக்டர். ஆர். செந்தில் குமார் M.D., MRCP(London)அவர்களைச் சந்தித்தோம். டாக்டர். ஆர். செந்தில் குமார்
IMG_1748தனது M.B., B.S., படிப்பை கோவை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். M.D., கல்வியை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றார். இங்கிலாந்து நாட்டின் ‘ராயல் காலேஜ் ஆப் பிஷியன்ஷ்’ அமைப்பு நடத்தும் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர். சர்க்கரை நோய் மற்றும் நாளமில்லா சுரப்பிக் குறைபாடுகளை குணப்படுத்துவதில் நல்லனுபவம் உள்ளவர். இத்துறையில் ஆகப் பெரிய திட்டங்களோடு மிகுந்த ஈடுபாட்டோடு தனது சேவையினை புரிந்து வருகிறார்.
மேலும் தொடர்புக்கு;
97890 97171, 82200 01562.
முகவரி:
டாக்டர் பாலகிருஷ்ணன் மருத்துவ மனை வளாகம்,
100 அடி ரோடு,
கோயம்புத்தூர் – 641 012
அவரிடம் பேசியதிலிருந்து:
டாக்டர், தைராய்டு தைராய்டு என்கிறார்களே, இதைப் பற்றிக் கூறுங்களேன்!
” தைராய்டு சுரப்பி” நமது கழுத்தின் முன்பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி வடிவில் அமையப் பெற்ற ஒரு நாளமில்லாச் சுரப்பியாகும். இச்சுரப்பியானது நாம் உண்ணும் உணவில் இருந்து அயோடினைப் பெற்று தைராய்டு ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த ஹார்மோனானது இரத்தத்தின் வழியாக நமது உடலின் அனைத்து செல்களுக்கும் செல்கிறது. தைராய்டு
THYROID_72
ஹார்மோனானது நமது உடல் சக்தியைப் பயன்படுத்துவதற்கும், நமது மூளை, இதயம், தசைகள் மற்றும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும் மற்றும் நமது உடலின் வெப்ப நிலையை சீராக வைப்பதற்கும்உதவுகிறது. இதனால்தான் தைராய்டு கோளாறுகளினால் அவதிப் படுபவர்கள் அதிக உஷ்ணம் அல்லது அதிக குளிர் இவற்றை தாங்கும் சக்தி இல்லாமல் இருப்பார்கள்.
பொதுவாக தைராய்டு கோளாறுகளை மூன்று பிரிவுகளில் வகைப் படுத்தலாம்.
1. அதிகமாக தைராய்டு சுரத்தல்
2. குறைவாக தைராய்டு சுரத்தல்
3. கழலை அல்லது வீக்கம்
அதிகமாக தைராய்டு சுரந்தாலும் அல்லது குறைவாக சுரந்தாலும் அது நமக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
டாக்டர், தைராய்டு அதிகமாக் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிக் கூறுங்களேன்?
hyperthyroidism_s2_illustration_thyroid
தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்வதால் நமக்கு சில உபாதைகள் ஏற்படலாம்.
1.நன்றாகப் பசி இருந்த போதிலும் எடை குறைதல்.
2.பதட்டம் , எரிச்சல்
3.வெப்பத்தை தாங்க முடியாத தன்மை
4.அதிகமாக வியர்த்தல்
5.தீவிரமான இதயத் துடிப்பு
6.கை நடுக்கம்
7.வயிற்றுப் போக்கு
8.மாதவிடாய் தள்ளிப் போகுதல்
9.கண்களில் வீக்கம்
டாக்டர், தைராய்டு அதிகமாக் சுரப்பதால் ஏற்படும் அறிகுறிகளை கூறினீர்கள். இதை எவ்வாறு உறுதிப் படுத்துவது?
இதை உங்கள் மருத்துவர்தான் உறுதிப் படுத்த வேண்டும். உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், உதாரணமாக அதிக இதயத் துடிப்பு, ஈரமான மிருதுவான தோல், உங்கள் கைகளில் உள்ள நடுக்கம், உங்கள் கண்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போன்றவைகளை அவர் கவனத்தில் கொள்வார்.
hyperthyroidism_s5_graves_dieseased_eyes
மேலும் உங்கள் இரத்தத்தைப் பரிசோதனை செய்து அதில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் அளவை வைத்தும் அவர் உறுதிப் படுத்துவார். இதற்காக அவர் T4 , T3 மற்றும் TSH போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்லலாம். மேலும் உறுதி படுத்தத் அவர் தைராய்டு ஸ்கேன் பரிந்துரைக்கலாம்.
டாக்டர், இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
உங்களுடைய வயது, பாலினம், தைராய்டின் அளவு மற்றும் அதன் தீவிரம், உங்களுடைய கடந்த கால மருத்துவ வரலாறு மற்றும்எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய வசதி போன்றவைகளை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப் படவேண்டும்.
தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் மருந்துகளை அவர் பரிந்துரைப்பார். இதற்கான சிகிச்சைக் காலம் 12 மாதங்களிலிருந்து 18 மாதங்கள் வரை இருக்கலாம். இது பலனளிக்காத போது அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.
டாக்டர், தைராய்டு அதிகமாய் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும்,சிகிச்சை முறைகளையும் கூறினீர்கள். தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?
நமது உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க முடியாத போது நமக்கு “ஹைப்போ தைராய்டிசம்” என்ற நிலை ஏற்படுகிறது. இதற்கான பொதுவான காரணம் நோய் தடுப்பாற்றல் குறைபாடுதான். நமது உடலில் இயல்பாகவே நோய் தடுப்பாற்றல் உள்ளது. கிருமிகள் நமது உடலில் புகும்போது அவைகளைக் கொன்றழித்து நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. சிலரது உடம்பில் நன்மை செய்யும் இந்நோய்த் தடுப்பாற்றலே தைராய்டு பிரச்சினைக்கு காரணமாகிறது. அவர்களது உடல் சுரக்கும் தைராய்டு செல்களையும், என்ஜைம்களையும் உடலுக்கு ஆகாத பொருள் என்று தவறாகப் புரிந்து கொண்டு அவற்றை அழித்து விடுகிறது. எனவே அவர்களுக்கு போதிய அளவு தைராய்டு சுரப்பதற்கான வழி இல்லாமல் போய் விடுகிறது. இது மாதிரியான குறை பாடுகள் பெண்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.
depression_woman
சிலருக்கு தைராய்டு கட்டிகள் இருக்கலாம். அல்லது புற்றுநோய் போன்ற காரணங்களினால் அவர்களுடைய தைராய்டு சுரப்பி முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ அகற்றப் பட்டிருக்கலாம். இவர்களுக்கும் தைராய்டு குறைவாக சுரப்பதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படும்.
சிலருக்கு புற்றுநோய் கதிவீச்சு சிகிச்சை அளிக்கப் பட்டிருக்கலாம். அதனால் தைராய்டு சுரப்பி பாதிக்கப் பட்டிருந்தாலும் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்காது.
டாக்டர், “ஹைப்போ தைரய்டிசம்” பற்றிக் கூறினீர்கள். இவ்வாறு ஹார்மோன்கள் குறைவாய் சுரப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாய் சுரப்பதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுமோ அதற்கு எதிர்மறையான பிரச்சினைகள் குறைவாய் சுரக்கும் போது ஏற்படக்கூடும்.
1. எடை கூடுதல்
2. களைப்பாய் உணர்தல்
feeling-tired-yawn-400x400
3. குளிர் தாங்க முடியாத தன்மை
4. வறண்ட தோல்
5.குறைவான இதயத்துடிப்பு
6. மலச்சிக்கல்
7. அதிகமான தூக்கம்.
8.அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல்.
9.ஞாபகசக்தி குறைதல்
10.குரல் மாற்றமடைந்து கரகரப்பாய் மாறுதல்.
இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
பொதுவாக தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் நிலையை (HYPOTHYROIDISM) குணப் படுத்த முடியாது. ஆனால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். தொடர்ச்சியாக மாத்திரைகளை உட்கொள்ளுவதன்மூலம் நாம் நமது உடலின் தைராய்டு ஹார்மோன் குறைபாட்டை சமன் செய்து கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரையை உட்கொண்ட பின்னர் குறைந்த பட்சம் 15நிமிடங்களுக்காவது எந்தவித உணவோ அல்லது திரவ உணவோ உட்கொள்ளக் கூடாது.
இந்த விஷயத்தில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
டாக்டர், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை விரைவு படுத்த ஏதாவது உணவு வகைகள், டானிக்குகள் உள்ளனவா? சில குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் இதைச் சரிக்கட்ட முடியுமா?
பொதுவாக அம்மாதிரியான உணவு வகைகளோ டானிக்குகளோ இல்லை. அவ்வாறு இருந்தாலும் அது அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நாம் செயற்கையான முறையில் தைராய்டு ஹார்மோனை நமது உடலுக்கு வழங்குகிறோம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள், சில குறிப்பிட்ட உணவுகள், டானிக்குகள் போன்றவை இவ்வாறு செயற்கையான முறையில் வழங்குவதை சீர்குலைத்து விடும். இது சம்பந்தமாக என்ன மாதிரியான உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
டாக்டர், தைராய்டு கோளாறுகளை எவ்வாறு தொடர்ச்சியாக கண்காணித்து வருவது?
நீங்கள் ஒவ்வொரு 6 வாரத்திலிருந்து 10 வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் TSH அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கர்ப்பம் தரித்திருந்தால் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளாய் இருக்கும் பட்சத்தில் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப — குறிப்பாக இது அவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனை பாதிப்பதால் –அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தங்களின் உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தின்படி அதற்குப் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கவனத்தில் வையுங்கள். இவை அனைத்தையும் முடிவு செய்வது உங்கள் மருத்துவர் மட்டுமே. பரிசோதனை முடிவுகளை நீங்களாகவே பார்த்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வராதீர்கள்.
டாக்டர், தைராய்டு கழலை அல்லது கட்டி பற்றிச் சொல்லுங்களேன்?
தைராய்டு கழலை அல்லது கட்டி என்பது தைராய்டு செல்கள் அதிகமாய் சுரப்பதால் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும். பெரும்பாலும் இக்கட்டிகள் தீங்கற்ற கட்டிகளாய் இருந்த போதிலும் சில சமயங்களில் அவை தைராய்டு கேன்சராய் இருக்கலாம். கட்டி இருப்பது கண்டறியப்பட்டவுடன் உங்கள் தைராய்டின் அளவை உங்கள் மருத்துவர் பரிசோதிப்பார். சுரப்பியே வீக்கமடைந்திருக்கிறதா அன்றி ஒரு கட்டி அல்லது பல்வேறு கட்டிகள் உள்ளனவா என்று அவர் கண்டறிய முயல்வார். பொதுவாக இம்மாதிரியான கட்டிகள் நம்மை தொந்தரவு செய்வதில்லையாதலால் அதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. இருந்த போதிலும் நாம் விழிப்புடன் இருப்பது நல்லது.